×

சென்னையில் 3 எம்பி, ஒரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதி மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. பின்னர் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற ெதாகுதி இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதி தேர்தலும், ஒரு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. சென்னையில் மொத்தம் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதில், மொத்தம் 9,529 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வட சென்னை தொகுதி மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் தென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 துணை கமிஷனர் தலைமையில் 3 கூடுதல் துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 54 சப்-இன்ஸ்பெக்டர்கள், 135 காவலர்கள், 300 ஆயுதப்படை காவலர்கள், 60 அதி தீவிர விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை 10.30 மணிக்கு மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பு அதிகாரியான அந்தந்த துணை கமிஷனர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வாக்கு பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் அவர் பார்வையிட்டார். அதேபோல், வாக்கு எண்ணும் மையங்ளின் முன்பு எந்தவித அசம்பாவிதங்களும், பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த உயர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நாளை(இன்று) நடைபெறுவது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போது ஆய்வு செய்தோம். ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கும் 750க்கும் குறைவில்லாத அதிகாரிகளும் காவலர்களும் வாக்கு எண்ணிக்கைக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அதேபோல் வெளியிலும் வாக்கு எண்ணிக்கை பணிக்காக கூடுதலாக சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும் காவலர்களும் இருப்பார்கள். 3 வாக்கு பதிவு மையங்களுக்கும் சேர்த்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 2,500 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மற்ற சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக 2,500 போலீசார் ஈடுபடுவார்கள். மொத்தமாக 5 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இதுதவிர மற்ற எல்லா பகுதிகளிலும் எந்த பிரச்னையும் இல்லாமலும், மக்களுக்கு எந்தவித தொந்தரவு இல்லாமலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் எதிர்பார்க்கவில்லை. அப்படி எந்த பிரச்னைகளும் வந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,policemen ,assembly seat counting centers , Chennai, Assembly Constituency, Vote counting centers, police protection
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...