×

மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? காலை 10 மணிக்கு தெரியும்: நாடு முழுவதும் பரபரப்பு; பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், மத்தியில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியும். வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது.  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலின்போது நடந்தது.

மக்களவைக்கு நடந்த 7 கட்ட வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 90.99 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் விவிபேட் ஒப்புகை சீட்டு இயந்திரம் முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதால், இவற்றில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை நூறு சதவீதம் ஒப்பிட்டு பார்த்து எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டன. இதனால், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு கடைசியாக எண்ணி, ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது. இதன் காரணமாக, இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் வழக்கமான நேரத்தை காட்டிலும் 5-6 மணி நேரம் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மத்தியில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற முன்னணி நிலவரம் தெரிய வரும். பொதுவாக மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் தினத்தன்று மாலையிலேயே தெரிந்து விடும். இம்முறை இரவு 10 மணிக்கு பிறகே இறுதி முடிவை கூற முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் கட்சி பிரதிநிதிகள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்கள் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு கால பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற திட்டங்களால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. விவசாயிகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்தாக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் இந்த நிலைமை தலைகீழானது. பாஜ கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறியதால் அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. இந்த கருத்துக் கணிப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. ஏற்கனவே, பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், உடனடியாக  ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான திட்டத்தை எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் வைத்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரையில், மக்களவை தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவை விட இடைத்தேர்தல் முடிவையே தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இதில், அதிமுக 9 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும். இல்லாவிட்டால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து, திமுக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும். எனவே, இந்த இடைத்தேர்தல் முடிவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இதேபோல், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களிலும்  சட்டப்பேரவை தேர்தல் நடந்துள்ளது. இதில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி இம்முறை தோல்வி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
 
எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக உள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் வெற்றி இழுபறியாகத்தான் இருக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இக்கணிப்புகள் உண்மையாகுமா? அடுத்த 5 ஆண்டுக்கான பிரதமர் மோடியா? அல்லது ராகுலா? அல்லது எதிரணியா என்பதை தீர்மானிக்கப் போகும் இன்றைய வாக்கு எண்ணிக்கையை நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பாஜ 437; காங். 423

இந்த மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ கட்சி 437 தொகுதிகளிலும், காங்கிரஸ் 423 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜ போட்டியிட்ட 427 தொகுதிகளில் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 450 இடங்களில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இம்முறை பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதி மற்றும் வயநாடு தொகுதிகளிலும், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.

உள்துறை எச்சரிக்கை


மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இன்று, நாட்டின் பல்வேறு தொகுதிகளில் வன்முறைகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை நாளன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், போலீஸ் டிஜிபி.க்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உறுதி

இம்முறை தேர்தல் ஆணையம் கடும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது. ஆளும் பாஜ.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றன. உபி, பீகார், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன், திடீரென வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பீதியை கிளப்பின. இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தை அணுகி, விவிபேட் சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால்  100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டுமென கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று நிராகரித்தது. வாக்கு எண்ணிக்கையில் வழக்கமான பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதலில் தபால் ஓட்டுகள், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஓட்டுகள், கடைசியாகவே விவிபேட் சீட்டுகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி உள்ளது. அதேபோல், 100 சதவீத விவிபேட் சீட்டுகளை எண்ண வேண்டுமென்ற கோரிக்கையையும் அது நிராகரித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.


Tags : country , Rule, across the country, thrill, strong security
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!