×

13 பேர் பலியான முதலாம் ஆண்டு நினைவுதினம் : 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பணகுடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13பேர் பலியான சம்பவம் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கூடன்குளம், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாலையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ம்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்தது.

மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் படங்களை ஆங்காங்கே வைத்து மாலையணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தும் வகையில் கூடன்குளம், கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 8ஆயிரம் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலியான 13பேருக்கு  பல்வேறு இடங்களில் மீனவ மக்கள், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 10 கிராமங்களை சேர்ந்த  நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் கூட்டப்புளியில் இன்றுமாலை மவுன ஊர்வலம் நடக்கிறது. அங்குள்ள சர்ச் முன்பிருந்து  நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் எரிக்ஜுடு அந்தோணி தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக செல்கிறது.

Tags : fishermen ,commemoration ,death ,sea , 13 people were killed, ceremonially, fishermen, not going to sea
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...