×

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்பட வாய்ப்பு: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்

டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை போது, வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கலவரம் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : vote count ,Central Interior ,state governments , Votes, Violence, Security, State Government, Federal Home
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...