×

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட கண்காணிப்பாளர் சம்மன் அனுப்பியதை எதிர்த்து மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் சம்மன் அனுப்பி பொதுமக்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்துவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பக்கூடாது நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குற்றவியல் சட்டம் 107 மற்றும் 111 பிரிவுகளின் கீழ் அனுப்பிய சம்மன்கள் மீது போலீஸ் இறுதி முடிவு எடுக்கக்கூடாது என காட்டமாக தெரிவித்தனர்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

* ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கருத்து கொண்டவர்களை போலீஸ் துன்புறுத்துவது ஏன்?
* ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை எனும் போது அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்?
* தமிழக அரசு போலவே ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என கூறுவோர் மீது எதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்கள்?
* தமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? இல்லை துன்புறுத்துவதா?

Tags : Sterlite ,Court , Sterlite plant, police, summon, high Court branch
× RELATED டாக்டரின் உடல் அடக்கத்தை எதிர்த்த 11...