ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்: மத்திய, மாநில அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என அன்புமணி கூறினார். சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், காலநிலை, பருவநிலை மாற்றம். அதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. இது திடீரென வந்தது கிடையாது. இனிவரும் காலங்களில் வறட்சி இன்னும் கடுமையாக இருக்கும். 3 பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற வறட்சியும், பெருவெள்ளமும் மாறி மாறி வரும்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ளது 2 ஆண்டு பிரச்னை கிடையாது. 50 ஆண்டுகால பிரச்னை. நீர் மேலாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மழை காலங்களில் உபரிநீரை சேமிக்க வேண்டும். கோதாவரியையும், காவிரியையும் இணைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்துவோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தெலங்கானா, ஆந்திரா, தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஓரளவு குறையும். இந்த திட்டத்தால் தமிழகத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நிரந்தர தீர்வு ஏற்படும். மதுவிலக்கு என்ற எங்களுடைய கொள்கையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். இப்போதுதான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அதேநேரத்தில் கொள்கையில் உறுதியாக இருப்போம். குறிப்பாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுப்போம். டெல்டா மாவட்டம் காலம் காலமாக மக்களுக்கு உணவு அளித்து கொண்டிருக்கும் ஒரு மண். அந்த மண், அப்படியே இருக்க வேண்டும். கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் எங்களது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம். எதிர்க்க வேண்டிய திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். கூட்டணியில் இருந்தால் உள்ளிருந்தே எதிர்ப்போம். அழுத்தம் கொடுப்போம். மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழலை பாதிக்கின்ற திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த விடமாட்ேடாம்.


Tags : state governments ,Central , Hydrocarbon, central, state government, dear
× RELATED ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் ...