×

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி தமிழக காங். தலைவர் பெயரில் போலி அறிக்கை

சென்னை: திமுக கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கையெழுத்துடன் போலி அறிக்கை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை வெளியிட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் காங்கிரசார் புகார் செய்தனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரியும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து இருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து கட்ட வாக்குப்பதிவு முடிந்து வரும் 23ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதற்கு முன்பாக, நேற்று முன்தினம் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜ கூட்டணிக்கு ஆதரவாகவே வெளிந்துள்ளது. இது எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.

இந்நிலையில், நேற்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில் ஒரு அறிக்கை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திடீரென வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், ‘‘வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சோனியா காந்தியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் காங்கிரஸ் தலைமை இதை அறிவிக்கும் என்றும், 3வது அணிக்கு முயற்சிப்பதால் கனத்த இதயத்தேடு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இது காங்கிரசார் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய தகவல் கே.எஸ்.அழகிரிக்கு தெரிவிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் இப்படி அறிக்கையை தயாரித்து, அவரது கையெழுத்துடன் அறிக்கை வெளியிட்டிருப்பது காங்கிரசார் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பிரிவு இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ், மூத்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ஆகியோர் தமிழக டிஜிபி அசுதோஷ் சுக்லாவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் அவர் கையெழுத்துடன் போலியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். திமுக- காங்கிரஸ் கூட்டணி முறியப்போவதாக ஒரு தவறான தகவலுடன், அவரது கையெழுத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இணக்கமாக பணியாற்றக்கூடாத வகையில் ஒரு தீய நோக்கத்தில் எதிர்கட்சிகள் யாரோ இது போன்ற திமுக கூட்டணி கட்சியினருக்குள் மன கசப்பை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை சைபர் கிரைம் மூலம் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட டிஜிபி அசுதோஷ் சுக்லாவும், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

Tags : Tamilnadu Cong ,coalition , Coalition, Confusion, Tamilnadu Cong. Leader, fake statement
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்