×

காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை வாபஸ் பெற தொழிலதிபர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக தொகைக்கு பாஜ தலைமையிலான தற்போதைய மத்திய அரசு ஒப்பந்தத்தை மாற்றியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் விமானங்களை கொள்முதல் செய்ய டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம், இந்திய பங்கு நிறுவனமாக ரிலையன்ஸ் டிபன்ஸூடன் ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அனில் அம்பானிக்கு இந்த வாய்ப்பை வழங்கியதன் மூலம் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கட்டுரை வெளியானது. அதில், பிரதமர் நரேந்திர மோடி ரபேல் ஒப்பந்தத்தை அறிவிப்பதற்கு 10 நாட்கள் முன்புதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரையில் இடம்பெற்ற தகவல்கள் தங்கள் நிறுவனத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, சுனில் ஜாகர், ரந்தீப் சிங் சர்ஜேவாலா, உம்மன் சாண்டி, அசோக் சவான், அபிஷேக் மானு சிங்வி, சஞ்சய் நிரூபம் மற்றும் சக்திசிங் கோகில் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆசிரியர், கட்டுரையாளர் உள்ளிட்டோர் மீது ₹5,000 கோடி மான நஷ்டஈடு கேட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்சர் சார்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அனில் அம்பானி குழும தரப்பு வழக்கறிஞர் ராசேஷ் பாரிக் கூறுகையில், ‘மான நஷ்ட வழக்கை வாபஸ் பெறுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Anil Ambani ,leaders ,Congress , Congress leaders, Vaspas, Anil Ambani
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...