×

விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% ஒப்பிட்டு பார்க்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க மின்னணு வாக்கு ஒப்புகை சீட்டு (விவிபேட்) இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. வாக்கு எண்ணிக்கையின்போது, மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும், ஏதாவது ஒரு வாக்கு இயந்திரத்தின் பதிவுகள், அதன் விவிபேட் இயந்திர சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் 21 எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 ஓட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை, விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதை சீராய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘2019 மக்களவை தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டவை. அதில், முதல் 3 கட்டங்கள் வரை பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உதாரணமாக, ஒடிசாவில் மக்களவை தொகுதிக்கான விவிபேட் இயந்திரங்கள், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரத்துடன் பொருந்தப்பட்டிருந்தது. 22 ஓட்டுகள் பதிவான பிறகு தவறு கண்டுபிடிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கிறது. எனவே, இம்முறை மின்னணு இயந்திரத்தின் மீதான முழு திருப்தியை ஏற்படுத்த, மே 23 வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான அனைத்து வாக்குகளையும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டது. இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, ‘‘ஏற்கனவே விவிபேட் தொடர்பான விவகாரத்தை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதியே விசாரித்துவிட்ட ஒரு விவகாரத்தை, 2 நீதிபதிகள் கொண்ட விடுமுறைக்கால அமர்வு முன்பு ஏன் கொண்டு வருகிறீர்கள்? தலைமை நீதிபதியின் உத்தரவை நாங்கள் மீற முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என உத்தரவிட்டார்.

பார்வையாளர்களை எதிர்த்த மனு டிஸ்மிஸ்


மக்களவை தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்ததால், சிறப்பு தேர்தல் பார்வையாளர் ஒருவரையும், மத்திய போலீஸ் பார்வையாளர் ஒருவரையும் தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. ‘‘வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டதால் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது, இதுதொடர்பாக மனுதாரரான சுயேச்சை வேட்பாளர் ராமு மாண்டி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Vivipet Acknowledgment, 100% Comparative, Discounted
× RELATED சொல்லிட்டாங்க…