×

கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் விருந்து கூட்டணி தலைவர்களுடன் பாஜ பேச்சு: எடப்பாடி, ஓபிஎஸ் பங்கேற்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜ தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் டெல்லியில் நேற்று விருந்து அளித்து, ஆலோசனை நடத்தினர். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை முடிந்ததுமே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், பாஜ மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உற்சாகமாக உள்ளனர்.  

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜ தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லியில் நேற்று மாலை விருந்து அளித்தனர். டெல்லி சாணக்கியாபுரியில் உள்ள அசோகா ஓட்டலில் இது நடைபெற்றது. இதில் மோடி, அமித் ஷா, பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாமக சார்பில் அன்புமணி, தேமுதிக தரப்பில் பிரேமலதா, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநில பாஜ தலைவர்களும் பங்கேற்றனர்.  

அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலை 7.15 மணிக்கு துவங்கிய விருந்து நிகழ்ச்சி, 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விருந்தில் மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவளித்த அனைத்து கூட்டணி தலைவர்களுக்கும் மோடியும், அமித் ஷாவும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடியும், அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். விருந்துக்கு முன்பாக, டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தை மோடி நடத்தினார். இதில், அமித் ஷாவும் பங்கேற்றார்.

எஸ்கேப் வேண்டாம்: ஆலோசனை கூட்டத்தில் பாஜ சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்தல் முடிவு வெளியான பிறகும் தற்போதுள்ள அதே ஒற்றுமையை கூட்டணி கட்சிகள் காப்பாற்ற வேண்டும். வேறு அணிக்கு மாறி விடக் கூடாது என்று மோடியும், அமித் ஷாவும் வலியுறுத்தி உள்ளனர்.


கூட்டத்தில் நடந்தது என்ன?
கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மோடியும், அமித் ஷாவும் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் பட்சத்தில் உடனடியாக ஆட்சியை அமைப்பது, கூட்டணி கட்சிகளுக்கு அரசில் அளிக்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவம் போன்றவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags : OBS , Opinion polls, release, feast coalition, bhaj talks, gossip, ops, participation
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி