×

சிசிடிவி கேமரா பழுதால் கொள்ளை சம்பவம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் கமிஷனர் நேரில் ஆய்வு

அண்ணாநகர்: தினகரன் செய்தி எதிரொலியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமரா செயல்பாடுகள் குறித்து கூடுதல் கமிஷனர் ஆய்வு செய்தார். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருவதால், 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இங்கு, கூட்ட நெரிசல் மற்றும் வெளியூர் பயணிகளை குறிவைத்து வழிப்றி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, இங்கு கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய 65 சிசிடிவி கேமராக்கள் போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் இந்த சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்காததால், தற்போது அனைத்தும் பழுதடைந்து காட்சிப் பொருளாக மாறியுள்ளது. இதை பயன்படுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், நகை வியாபாரியிடம் 25 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை பழுது காரணமாக குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். ஆனாலும், பழுதான சிசிடிவி கேமராக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயம்பேடு பஸ் நிலையத்தில் பழுதான சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு, அங்கு நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் கடந்த 20ம் தேதி வெளியானது.  இந்நிலையில், அண்ணாநகர் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜெயராமன் ஆகியோர் நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறதா என சோதனை செய்தனர். பின்னர், தினசரி நடைபெறும் குற்ற சம்பவங்களின் விவரங்கள் குறித்து பஸ் நிலைய போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர், பஸ் நிலைய வளாகத்தில் பழுதாகி உள்ள சிசிடிவி கேமராக்கள் விரைவில் சீரமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துவிட்டு சென்றனர்.

Tags : CCTV ,commissioner ,bus stand ,Koyambedu , CCTV camera repair, looting, Koyambedu bus stand, additional commissioner
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை