×

உபி, பீகார், பஞ்சாப், அரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்? சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு சந்தேகத்தை கிளப்பி உள்ள நிலையில், இக்குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக  செய்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் முழு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நிராகரித்துள்ளன. ‘இந்த கணிப்புகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதற்கு முன்பாக நடக்கும் ஒரு சூழ்ச்சியே,’  என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார். அதோடு, தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க வேண்டும்; பாஜ.வுக்கு மீண்டும் அந்த வாய்ப்பை அளித்து விடக் கூடாது என்பதில் இதன் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் வேறு இடங்களுக்கு மாற்றுப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நேற்று பரவி பரபரப்பை ஏற்படுத்தின. உபி. மாநிலம், சந்த்தவ்லி தொகுதியில் வாகனம் ஒன்றிலிருந்து இறக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 கடைகளில் அடுக்கி வைக்கப்படும்  காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

அந்த வீடியோவில், ‘எதற்காக இங்கு இயந்திரங்களை கொண்டு வருகிறீர்கள்?’ என வீடியோவை எடுத்த நபர்கள் கேட்க, அங்கிருந்த அதிகாரிகள், ‘இவை 7ம் கட்ட வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படாதவை. தேர்தல் முடிந்ததும் கொண்டு வர முடியாததால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது,’ என பதில் அளிக்கின்றனர்.

மற்றொரு வீடியோவில், உபி.யின் காஜிபூர் தொகுதியில், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் அப்சல் அன்சாரி, வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகளும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
 
உபி.யின் தோமரியாகஞ்ச், அரியானாவின் ஜான்சி, மாவ், மிர்சாபூர் போன்ற இடங்களிலும், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களின் ஒரு சில இடங்களில் மினி லாரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு இடத்திற்கு  கொண்டு செல்லப்படுவது போன்ற வீடியோக்களும், தகவல்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதன் மூலம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றுவதற்கு முயற்சி மும்முரமாக நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், ‘வட இந்தியா முழுவதும் அவசர அவசரமாக வாக்குப்பதிவு  இயந்திரங்கள் மாற்றப்படும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இயந்திரங்களை மாற்றுவது யார்? எதற்காக இது நடக்கிறது? மாற்றுவதற்கான காரணம் என்ன? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை,’ என கூறியுள்ளார். இதேபோல், மற்ற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

தேர்தல் ஆணையம் மறுப்பு

வாக்குப்பதிவு  இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்ட அறிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது என வெளியாகியுள்ள தகவல்களும், வீடியோக்களும் பொய்யானவை. வீடியோக்களில் காட்டப்பட்ட எந்த வாக்குப்பதிவு இயந்திரமும் தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை அல்ல. அவை, மாற்று இயந்திரங்களாக கொண்டு வரப்பட்டவை. அவற்றை கையாள்வதில் பாதுகாப்பு குறைபாடு இருக்கும்  பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குகள்  பதிவான இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றன. எனவே, அது பற்றி மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, 2 பூட்டுகள் போட்டு சீலிடப்பட்டு உள்ளன. சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அந்த அறைகள் கண்காணிக்கப்படுகின்றன.

சிசிடிவி கேமிரா பதிவுகளை கட்சி பிரதிநிதிகளும் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணும் நாளன்று பாதுகாப்பு அறைகள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியில் எடுக்கப்படும். இதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவ்வாறு அது கூறியுள்ளது. ‘சமூக வலைதளங்களில் வந்த வீடியோவில் இருப்பவை அனைத்தும் மாற்று  இயந்திரங்கள். அவை தேர்தல் அதிகாரி அல்லது கலெக்டர் தலைமையிலேயே வேறு  இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன’ என்று அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜி கவலை:
முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மக்கள் தீர்ப்பை
சேதப்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையமே முழு பொறுப்பு. நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் காரணிகளை அனுமதிக்கக் கூடாது. ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தன் மீதான நம்பிக்கை, நேர்மையை நிரூபிக்க வேண்டியது ஆணையத்தின் கடமை,’ என கூறியுள்ளார்.

Tags : UP ,Punjab ,Bihar ,Haryana , UP, Bihar, Punjab, Haryana, voting, machinery, change?
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...