முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  முன்னாள்  பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி பெரும்புதூரில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது, மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆண்டுதோறும் இந்த நாள் தீவிரவாத எதிர்ப்பு  தினமாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று அவரது 28வது  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ராஜிவ்  காந்தியின் நினைவிடமான வீர பூமியில் அவரது மனைவியும், ஐக்கிய முற்போக்கு  கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும், மகனுமான  ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மகளுமான   பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து  காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் ராஜிவ் சமாதியில் மலர்தூவி  அஞ்சலி செலுத்தினார்.

 ‘அன்பை கற்று கொடுத்தார்’
ராகுல் காந்தி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது தந்தை மிகவும் மென்மையானவர், அன்பு மிக்கவர். அனைவரிடமும்  அன்பாக இருக்க வேண்டும், அனைவரையும் மதிக்க வேண்டும் என எனக்கு  கற்றுக் கொடுத்தவர். யாரையும் வெறுக்கக் கூடாது என கற்றுக் கொடுத்துள்ளார்.’ அவரை நான் மிகவும் ‘மிஸ் பண்ணுகிறேன்’ என  குறிப்பிட்டுள்ளார்.


× RELATED சியாம முகர்ஜி நினைவு தினம் பிரதமர் அஞ்சலி