×

வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கும் நிலையில் தேர்தல் கமிஷனிடம் 22 கட்சிகள் மனு: குளறுபடி நடந்தால் 100% விவிபேட் சீட்டை எண்ண வேண்டும், மக்கள் தீர்ப்பை சீர்குலைக்க கூடாது என்று வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள ஒப்புகை சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் 22 எதிர்க்கட்சிகள் கூட்டாக மனு அளித்துள்ளன. ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

அவருடைய தலைமையில் டெல்லியில் 22 எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தரப்பில் குலாம்நபி ஆசாத், அகமது படேல், திமுக சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் சார்பில் சந்திரா மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதை தடுப்பது, வாக்கு எண்ணிக்கையின்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டம் முடிந்த பிறகு மாலை 3 மணியளவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் 22 கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக சென்று, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், ‘வாக்கு எண்ணிக்கையின் போது, விவிபேட்டில் பதிவாகியுள்ள ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் இருப்பது தெரிந்தால் அந்த தொகுதியில் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண வேண்டும்.

பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றன. மனு கொடுத்து விட்டு வெளியே பிறகு, 22 கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், ‘‘ஏதாவது குளறுபடி வந்தால், அனைத்து விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்,’’ என்றார்.

சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘மக்களின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் மதிக்க வேண்டும். அதை சீர்க்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது,’’ என்றார். பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சந்திரா மிஸ்ரா கூறுகையில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது. இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கையின்போது மத்தியப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளோம்,’’ என்றார்.

மேலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு இடங்களில் இடமாற்றம் செய்யப்படுவது குறித்தும் தலைவர்கள் தங்கள் பேட்டியில் கவலை தெரிவித்தனர். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின்போது வெளிப்படையான தன்மையையும், நேர்மையையும் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டனர்.

Tags : Elections ,Election Commission ,VVIPs , Counting of votes, tomorrow, Election Commission, 22 parties, petition
× RELATED தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை ஆந்திர...