×

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி: சகோதரர் சுப்ரமணி பேட்டி

திருச்சி: கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார். கத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து (30) 2 நிமிடம் 2.70 விநாடிகளில் எல்லையைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்நிலையில், ஊக்க மருந்துப் பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. போலந்தில் இந்தியத் தடகள வீராங்கனைகளுடன் இணைந்து கோமதியும் பயிற்சி பெறுவதாக இருந்தது. அந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்படும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா, இதுகுறித்துத் தனக்கு அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளிவரவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு கோமதி மாரிமுத்து கூறியதாவது, இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். இந்தத் தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள்? அதுபற்றி ஏன் என்னிடம் கருத்து கேட்கவில்லை என்று கோமதி கேள்வியெழுப்பியுள்ளார். என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நான் பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன்.

எனவே ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. மேலும் பயிற்சிக்காக நான் போலந்துக்குச் செல்வதிலும் சிக்கல் எதுவும் இல்லை. நாங்கள் வியாழன் அன்று போலந்துக்குப் புறப்படுகிறோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், மேலும் இந்த விவகாரத்தால் கோமதி, போலந்து செல்வதற்குச் சிக்கல், எழுந்துள்ளதாக வெளியான செய்திக்கும் கோமதி தரப்பில் மறுப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும் இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Gomti Marimuthu ,Brother Subramani , Gomati Marimuthu, dementia, rumundi, brother, brother Subramani
× RELATED இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில்...