×

30க்கும் மேற்பட்டவை சிக்கின நாகர்கோவிலில் பன்றிகள் வேட்டை தொடக்கம்: விரட்டி, விரட்டி மடக்கினர்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை மாநகர பணியாளர்கள் மடக்கி பிடித்தனர்.  நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பன்றி தொல்லைகள் இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் பரவி வருவதாகவும் ஆணையர் சரவணக்குமாரிடம் புகார் வந்தது. இதையடுத்து கடந்த இரு  நாட்களுக்கு முன் ஆணையர் சரவணக்குமார், அதிகாரிகளுடன் மாநகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பன்றிகள் நடமாடும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக அதை பிடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி  மாநகர  நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, ராஜா, ராஜேஷ், சத்யராஜ் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் இடம் பெற்றனர்.

பன்றிகளை பிடிப்பதற்காக மதுரையில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை முதல் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பன்றிகள் வேட்டை தொடங்கியது. வடசேரி பஸ் நிலையம், சுப்பையார் குளம்,  புதுக்குடியிருப்பு, அருந்ததியர் தெரு, கோட்டார் ரயில்வே ரோடு, டி.வி.டி. காலனி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பன்றிகள் வேட்டை நடந்தது. சாலைகளிலும், கழிவு நீர் ஓடைகள், குப்பைகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பணியாளர்கள் விரட்டி,  விரட்டி பிடித்தனர். ஒரு வீட்டில் மொத்தமாக பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தன. அவற்றை அப்படியே பிடித்து வண்டியில் ஏற்றினர். வடசேரி பஸ் நிலையத்தில் பன்றிகள் சுற்றி திரிந்த போது பணியாளர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒரு சில பன்றிகள்  வலையில் சிக்காமல் அங்கும், இங்கும் ஓட்டம் பிடித்தன. இருப்பினும் பணியாளர்கள் போராடி பன்றிகளை மடக்கி, மடக்கி பிடித்தனர். காலை வரை 30க்கும் மேற்பட்ட பன்றிகள் சிக்கின. பன்றிகள் வேட்டை நடைபெற்ற சமயத்தில் பிரச்சினை  ஏற்படாத வகையில் வடசேரி சப் இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.



Tags : Nagercoil , In Nagercoil, pigs hunt
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு