×

செய்யாறு அருகே பட்டுப்போன மரத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

செய்யாறு: செய்யாறு அருகே பட்டுப்போன மரத்தை அகற்றும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் செய்யனூர்-வெங்களத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்கு செய்யாறு, வெம்பாக்கம் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.இக்கோயில் அருகேவுள்ள பஸ் நிறுத்தத்தில் பட்டுப்போன அரச மரம் கடந்த 3 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. பலமான காற்று வீசும்போது இந்த மரத்திலிருந்து கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனை அகற்ற ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்தார்களாம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த மரத்தின் அருகே ஆடுகளை மேய்க்க சென்ற கூலித்தொழிலாளி பெருமாள் என்பவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால், கோயிலுக்கு வரும்  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரச மரத்தை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodar , Make, silly wood, people's request
× RELATED நாகர்கோவிலில் அமமுக பிளக்ஸ்...