×

வாடிப்பட்டியில் வைகாசி விசாக திருவிழா விடிய, விடிய பூப்பல்லக்கு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தர்மராஜன் கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய பூப்பல்லக்கு நடந்தது.  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கை எழில்மிகுந்த சிறுமலை  அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது தர்மராஜன் கோட்டை. இங்குள்ள குன்றின் மீது பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலில் 99வது ஆண்டு வைகாசி  விசாக திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை தர்மராஜன் கோட்டையில் உள்ள கோயில் இருந்து பட்டுப்பல்லக்கில் புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வாடிப்பட்டி வருகை தந்து  கள்ளர் மடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வல்லபகணபதி கோயில் மண்டகப்படி சென்றடைந்தார்.

அங்கு பூப்பல்லக்கில் வண்ண மின்விளக்குகளில் எழுந்தருளினார். நள்ளிரவு 2 மணிக்கு வல்லபகணபதி கோயிலில் இருந்து புறப்பட்ட பூப்பல்லக்கு விடிய, விடிய வாடிப்பட்டி ஊர் முழுவதும் வலம்வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று காலை மீண்டும் பூப்பல்லக்கிலேயே தர்மராஜன்  கோட்டையில் உள்ள கோயிலை சுவாமி சென்றடைந்தது. விழாவையொட்டி வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  விழா ஏற்பாடுகளை சொக்கையா சாமி பேரபிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags : Vattipatti ,festivities festival , Vattipatti, Vaai Vaagai Festival, Bhuppallu
× RELATED கட்டணம் வசூலிப்பதில் வாக்குவாதம்...