×

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கைதான அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளனர். விருப்ப ஒய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி, ரவிச்சந்திரன் இடைத்தரகர்கள் லீலா, ரேகா ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளனர்.

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் 8 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 8 பேர் கைதாகி உள்ளனர். இவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மேற்பார்வையாளராக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கைதான நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், புரோக்கர்கள் பர்வீன், லீலா, கஷினா ஆகிய 5 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், 5பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அனைவரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி

இந்நிலையில் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் இடைத்தரகர்கள் செல்வி, அருள்சாமி மற்றும் லீலா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். லீலாவின் ஜாமீன் மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி இளவழகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு நடக்கும் நிலையில் ஜாமீன் தந்தால் விசாரணை பாதிக்கும் என சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது.

செவிலியர் அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் மனு

இந்நிலையில் ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குழந்தை விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் 2வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இடைத்தரகர் லீலா 3வது முறையாகவும், இடைத் தரகர் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா, அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார், சேலம் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் ஷாந்தியும் முன்முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மாலை அல்லது நாளை காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags : Rasipuram ,Amudha , Rasipuram, child, sales, nurse, apudwalli, bail
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து