×

மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., செல்ல வேண்டிய அவலம்

* மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

ஈரோடு :   ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மாற்றுதிறனாளி அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.   ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், பேரூராட்சிகள், ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அறை, கனிம வளத்துறை, மாவட்ட வழங்கல்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற பகுதியில் மாற்றுதிறனாளிகளுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.   இதனால் மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு செல்ல தடை செய்யப்பட்டு, மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாமல் கண்பார்வையற்றவர்கள், நடக்க முடியாதவர்கள், மாற்றுதிறனாளிகள் வழக்கம்போல கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

பின்னர் மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு செல்லும்போது அங்கு தடை விதிக்கப்பட்டது தெரிய வருகிறது. இதனால் அங்கிருக்கும் பொதுமக்களிடம் வழி கேட்டு செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் மாற்றுதிறனாளிகள் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து அறிவிப்பு போர்டுகள் வைத்துள்ள நிலையில் மாற்றுதிறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.    

 தற்போது உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஆசிரியர் காலனி வழியாக அகத்தியர் வீதி, பூமாரியம்மன் கோயில் வீதி, பிரசாந்தி பள்ளி எதிரில் உள்ள அவ்வையார் வீதி வழியாக சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் வீதி, வீதியாக சென்று அலுவலகத்தை அடைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாற்றுதிறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாற்றுதிறனாளிகளை அலைகழிக்காமல் கலெக்டர் அலுவலகத்தின் தரைதள பகுதியிலேயே மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் மாற்றுதிறனாளிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டி வருகிறது.   இதுகுறித்து மாற்றுதிறனாளிகள் கூறியதாவது: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் ஒதுக்குப்புறமாக மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு சுலபமாக சென்று வந்தோம். தற்போது புதியதாக கலெக்டர் அலுவலகம் கட்டுவதால் இந்த அலுவலகத்திற்கு செல்லும் பகுதியை தடை செய்து விட்டனர்.
இதனால் ஒரு கி.மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. மாற்றுதிறனாளிகளான நாங்கள் எப்படி செல்வது என தெரியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.  

எனவே மாவட்ட நிர்வாகம் மாற்றுதிறனாளிகள் சுலபமாக சென்று வரும் வகையில் அலுவலகத்தை கீழ்தளத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் மாற்றுதிறனாளிகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : Erode ,Physically Challenged,reach
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...