×

கோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி :  கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கண்மாயில் அரசு அனுமதியை மீறி கரிசல் மண் எடுப்பதற்கு பதிலாக வெடி வெடித்து அதிக ஆழத்தில் சரள் மண் எடுப்பதை கண்டித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் கரிசன்குளம் கண்மாய் எனும் பெயரில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நிரம்பும் தண்ணீரை கொண்டு இக்கிராம மக்கள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

alignment=


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால் இந்த கண்மாய் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் நீண்டகாலமாக கண்மாய் தூர்வாரி ஆழப்படுத்தாதால் மண்மேடாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் போதிய தண்ணீர் கண்மாயில் நிரம்புவதில்லை. இதன் காரணமாக கிராம விவசாயிகள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருவதோடு, விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கண்மாயில் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மட்டும் கரிசல் மண் எடுப்பதற்கு தனிநபர் ஒருவருக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அரசின் அனுமதியை மீறி கண்மாயில் கரிசல் மண்ணை அள்ளிவிட்டு அதற்கு கீழ் உள்ள சரள்மண்ணை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அதிக ஆழம் தோண்டி எடுத்து வருகின்றனர்.
இதற்காக கண்மாயில் ஆங்காங்கே அதிக ஆழம் வரை குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இவ்வாறு குழிகள் தோண்டுவதற்கு பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதாலும், மழை காலங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கும் போது  பள்ளம் மற்றும் மேடு எதுவும் தெரியாமல் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அத்துமீறி சரள் மண் எடுப்பதை தடை செய்ய கோரியும் நேற்று காலை ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கண்மாய்க்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 தகவலறிந்து கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கண்மாயில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளை மூடவும், கரிசல் மண் மட்டுமே எடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும், கண்மாயை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : Tamil Nadu , kovilpatty, Sandy soil,protest,JCP
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...