சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் கழிவுநீர் கலந்த தண்ணீர் சப்ளை

* லட்சக்கணக்கில் பணம் சுருட்டுவதாக
அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு

சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளில் தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் குடும்பத்துடன் வசதித்து வருகின்றனர்.
இவர்களின் சம்பளத்தில் இருந்து வீட்டு வாடகை, வீட்டுப்படி மற்றும் 3 முதல் 4 சதவீதம் பராமரிப்பு தொகை ஆகியவை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் மெட்ரோ வாட்டர் இணைப்பு தரப்படவில்லை. இதனால், குடியிருப்புகளின் பயன்பாட்டிற்கு கிணற்று நீர் மற்றும் லாரி தண்ணீரைதான் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் வறண்டு வருவதால் கடந்த 2 மாதங்களாக லாரி மூலம்தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தண்ணீர் சேறு கலந்து பச்சை மற்றும் மஞ்சள் நிறமாக உள்ளது. மேலும், கெமிக்கல் கலந்த நீரும் வழங்கப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்துவால் குடியிருப்பு வாசிகளுக்கு தோல் வியாதி, தொண்டை புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இதுதொடர்பாக, குடியிருப்புவாசிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தொடர்ந்து கழிவுநீர் கலந்த தண்ணீரை தான் விநியோகித்து வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ள பாத்திரங்கள், தரைகள் சேறுபடிந்து கறையாக உள்ளது. அந்த கழிவுநீரை பயன்படுத்தி துணி துவைப்பதால் அனைத்து உடைமைகளும் பாழாவதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு தினமும் 48 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கழிவுநீர் கலந்துள்ளது. லாரி தண்ணீருக்காக மாதம்தோறும் லட்சக்கணக்கில் செலவு செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர். அவர்களிடம் நல்ல தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதில் அளிக்க மறுக்கின்றனர்.

இந்த தண்ணீரைதான் உணவு சமைக்க பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ரபீந்தரிடம் புகார் அளித்தோம். ஆனால், தற்போது வரை எங்களுக்கு கழிவுநீர் கலந்த தண்ணீர்தான் விநியோகிக்கப்படுகிறது. இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு எங்களுக்கு நல்ல தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

× RELATED எச்சரிக்கை போர்டு வைத்தும்...