×

ஒபெக் கூட்டணி நாடுகளின் திட்ட வட்ட முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு: தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: உற்பத்தி குறைப்பு தொடரும் என ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் 73.17 டாலராக அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 1.3 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 73.17 டாலராக உயர்ந்தது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி கச்சா எண்ணெய் பேரல் 73.40 டாலராக இருந்தது. இதன்பிறகு மீண்டும் ஏறக்குறைய இதே அளவை கச்சா எண்ணெய் விலை எட்டியுள்ளது.

இதுபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் 1.3 சதவீதம் அதிகரித்து பேரல் 63.58 டாலராக இருந்தது. டெக்சாஸ் கச்சா எண்ணெய் கடந்த 1ம் தேதிக்கு பிறகு மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இதற்கு ஒபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்பு முடிவுதான் காரணம். கச்சா எண்ணெய் விலை சரிவால், எண்ணெய் வள நாடுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலையை உயர்த்த உற்பத்தி குறைக்கப்படும் என்ற முடிவை ஒபெக் எனப்படும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு எடுத்தது. அதாவது, ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள், ரஷ்யா மற்றும் ஒபெக் அமைப்பில் சாராத எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து, கச்சா எண்ணெய் உற்பத்தியை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்தன.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவை ஒபெக் நாடுகள் கைவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சவூதி அமைச்சர் கலீல் அல் பாலிக் நேற்று முன்தினம் அித்த பேட்டியில், சந்தை தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சர் சுகைல் அல் மஜ்ரோவி கூறுகையில், சந்தையில் ஏற்படும் இடைவெளியை எங்களால் நிரப்ப முடியும். அதேநேரத்தில், உற்பத்தி குறைப்பை கைவிடுவது சரியான முடிவு அல்ல என தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது. இந்த நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : OPEC Coalition ,countries , OPEC Coalition Country, Project Round End, Crude Oil Price, Promotion
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...