×

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு லால்பேட்டை, முத்துப்பேட்டை, சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு: லேப்டாப், செல்போன் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வழங்கிய லால்பேட்டை வாலிபர் வீடு, சேலம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் துண்டு பிரசுரம் வழங்கினர். அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இதில் தொடர்புடைய ரஷீது என்பவர் வீட்டை சோதனையிட சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை ஒற்றை தெருவில் வசித்து வரும் சாதுல்லா மகன் ரஷீது (20) வீட்டில் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமையின் துணை கண்காணிப்பாளர் ஷகில் அஹமது, துணை ஆய்வாளர்கள் பரத்ராஜ், சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன், 8 சிம்கார்டுகள் மற்றும் சந்தேகத்திற்குறிய எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட 94 ஆவணங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரஷீது சிறுவயது முதல் ஆயங்குடியில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி 12ம் வகுப்பு வரை படித்து வந்ததும், அதன் பிறகு வேலைக்காக துபாய் சென்று தனது தந்தையுடன் வசித்து வந்ததும், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் துபாய் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்து ரஷீதின் தாய், அவரது பாட்டி, வீட்டு வேலைக்கார பெண் ஆகியோரிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரஷீது தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், மேலும் மத உணர்வை தூண்டியதாகவும் அறியப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் வாலிபர் வீட்டில்: சேலம் அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நேரத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி, பல இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தார்கள். அந்த வழக்கில் லியாகத்அலியும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை, என்ஐஏ அதிகாரிகள் 8 பேர் சேலம் வந்தனர். அவர்கள், லியாகத்அலியின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். வீட்டிற்குள் ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனையிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லியாகத்அலியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஜாமீனில் வெளியே வந்தபின் லியாகத் அலி சேலத்தில் வசிக்கவில்லை. அவர், சென்னையில் வேலை பார்த்து வருவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு, அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

முத்துப்பேட்டை: கடந்த 2018ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் சாஜித் அகமது, இம்தியாஸ் அகமது, ரிஸ்வான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது மூவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு முத்துப்பேட்டைக்கு வந்த தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து சுமார் 80 பேர் சாஜித், இம்தியாஸ், ரிஸ்வான் ஆகியோரது வீடுகளை சுற்றி வளைத்து அதிரடியாக வீடுகளுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டில் இருந்த வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அதிகாலை 5 மணிக்கு துவங்கிய சோதனை காலை 11 மணிக்கு முடிந்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கீழக்கரை வழக்கு சம்பந்தமாக மூன்று வாலிபர்களிடமும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவர்களின் வீடுகளில் சோதனை செய்ததாகவும் இதில் இம்தியாஸ் அகமது வீட்டில் இரண்டு கத்தி ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்ததாகவும், இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறி விட்டு சென்றனர்.

Tags : NIA ,Salem ,Muthupetu ,ISIS , Support for ISIS organization, laboratory, pediatrician, NIA officers, study
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை