×

திருத்தணி, கரூரில் 109 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இன்னும் 8 நாட்களில் முடிய உள்ள நிலையில், வட மாநிலங்களில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணி, கரூர் ஆகிய இடங்களில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூரில் 107 டிகிரி, மதுரை, திருச்சி 106 டிகிரி, பாம்பன், சேலம் 104 டிகிரி, சென்னை, நாமக்கல், தர்மபுரி 102 டிகிரி வெயில் நிலவியது. இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை, குறிப்பிடும்படியாக நேற்று பெரும்பாலான இடங்களில் பெய்யவில்லை.

இருப்பினும் வெயில் படிப்படியாக குறைந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க தாமதமாகும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன்மூலம் கேரளாவிலும் விரைவில் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்றும் அதிவெப்ப தாக்கத்தினால் இந்திய பெருங்கடல் பகுதியில் வெப்பக்காற்று வீசி வருகிறது. இது தென்மேற்கு பருவமழைக்கு பாதகமாக இருப்பதாகவும் வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Tags : Tiruttani ,Karur , Tiruttani, Karur, 109 degrees, sunrise
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...