×

கருத்து கணிப்பு விவகாரத்தில் மம்தாவின் கருத்து புறந்தள்ள முடியாத ஒன்று: டிடிவி.தினகரன் அறிக்கை

சென்னை: கருத்து கணிப்பு விவகாரத்தில் மம்தாவின் கருத்து புறந்தள்ள முடியாத ஒன்று என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது மோசடியான கருத்துக் கணிப்பு என்பதற்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்று ஒரு விவரத்தை வெளியிட்டது பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சி. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அதிகபட்சம் ஆறு சதவிகிதம் வாக்களித்ததாக மக்கள் சொன்னார்கள் என்று சொல்லப்பட்டது. அதாவது, சுமார் 60 ஆயிரம் மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்ததாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம். நிஜம் என்ன தெரியுமா? அந்தக் கட்சி, அந்தத் தொகுதியில் போட்டியிடவே இல்லை. வாக்கு இயந்திரத்தில் இல்லாத ஒரு பட்டனை அழுத்தி எப்படி மக்கள் வாக்களித்திருப்பார்கள்? எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

இப்படிப்பட்ட மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. அமமுக தொண்டர்களும் இதைப் புறந்தள்ள வேண்டும்.உண்மை நிலவரம் அப்படி அல்ல என்பது தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டியது. இந்த நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து கவனிக்க வேண்டியது. அவர் சொன்ன கருத்தை புறம்தள்ள முடியாத ஒன்றாகும். இதை மனதில் வைத்து, வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ம் தேதி நாம் இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இறுதிச் சுற்று எண்ணி முடித்து அதிகாரப்பூர்வமாக முடிவுகளை அறிவிக்கும் வரை நமது முகவர்கள் உறுதியோடும், விழிப்போடும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Mamta ,DTV , Opinion poll, Mamta opinion, DT.Dinakaran, report
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...