பாஜக தலைவர் அமித்ஷா புது வியூகம் : தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை இரவு விருந்தளிக்கிறார்

டெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா நாளை விருந்து தர இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற மே 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கருத்து கணிப்பின் முடிவுகள் குறித்தும், தேர்தல் முடிவுகளை ஒட்டிய செயல்பாடுகள் குறித்தும் புதிய ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கு அமித்ஷா நாளை இரவு விருந்து தர உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களும் இந்த விருந்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அமித்ஷா அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலுமே பாஜக கூட்டணி பெரும்பாண்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் பாஜக  தனி பெரும்பான்மையுடன் வெல்லும் என்று சில கணிப்புகளே கூறி இருக்கின்றன. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அமித்ஷா சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நிறைவடைந்த பிறகு, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>