×

உலக அளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடும் சிறுமி!

உலகின் முக்கிய பிரச்னைகளில் முதன்மையானது பருவநிலை மாற்றம். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களை மட்டுமில்லாமல் மொத்த புவியையுமே பாதிப்பதால் பருவநிலை மாற்றத்தை சமன்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் பல்வேறு செயல்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் கிளைமேட் சேஞ்ச் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பல்வேறு நாடுகளும், பிரபலங்களும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகளை செய்துவருகையில் பதினாறு வயது ஸ்வீடன் சிறுமியின் செயல்பாடு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஸ்வீடனைச் சேர்ந்தவர் பதினாறு வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், அதீத கார்பன் புகை வெளியீடு என சூழலியல் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி தன் பதினான்கு வயதில் தெரிந்துகொண்டுள்ளார்.

உடனே சூழலியல் சார்ந்த பதாகைகளை ஏந்தி ஸ்வீடன் பாராளுமன்றத்தின் எதிரே தனியொரு ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்னைகளின் வீரியத்தை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தியுள்ளார். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூழலியல் சார்ந்து பல்வேறு போராட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல ஊர்களுக்கு பயணித்து மாணவர்களை ஒருங்கிணைத்து சூழலியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் அழுத்தமான குரலை பதிவு செய்தவர் பள்ளிக்குப் போக நேரம் கிடைக்காததால் படிப்பை நிறுத்திவிட்டு முழுவீச்சில் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள ஆயிரம் நகரங்களில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு மாபெரும் பேரணியை தனி ஒரு சிறுமியாக ஒருங்கிணைத்தார் கிரேட்டா.‘பருவநிலை மாற்றம் பற்றி நாம் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இதனால் மனித இனம் மட்டுமில்லாமல் அனைத்து உயிரனங்களும் அழிந்துவிடும். உலகத் தலைவர்கள் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்’ என்கிறார் கிரேட்டா. இவரின் உலக நலனுக்கான செயல்பாடுகளை முன்வைத்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பல்வேறு பிரபலங்கள் பரிந்துரை செய்துவருகின்றனர். ஒருவேளை அவருக்கு நோபல் பரிசு கிடைத்தால் சிறுவயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெறுவார் கிரேட்டா.

Tags : world , Environment, girl, fight
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்