×

கூத்தாநல்லூர் பகுதியில் பூ பூத்து காய் காய்க்கும் பருவத்தில் பருத்தி பயிர்

* பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

கூத்தாநல்லூர் : கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் பருவம் எய்திய பெண்ணாய் பூ பூத்து வனப்புடன் காட்சியளிக்கிறது. இந்த நேரத்தில்தான் பருத்திச்செடியை கவனமுடன் பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பருத்தி விவசாயிகள் அந்த பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர். தளதளவென பச்சை இழைகளோடு அடர்ந்து பரந்து வளர்ந்திருக்கும் பருத்தி செடிகள் முழுவதும் மஞ்சள் மற்றும் நீல நிறப்பூக்கள் காணப்படுகின்றன. இப்படி வளர்ந்திருக்கும் செடிகளை ஆடுமாடுகள் விரும்பி உண்ண பருத்திக்காட்டுக்குள் வரும்.

அதனை தடுக்கும் வகையில் வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் பச்சை நிற தழைகளை பூச்சிகள் எளிதாக தாக்கும் அபாயமும் உள்ளது. அதனை தடுக்க தக்க பூச்சிக்கொல்லிகளை அடிப்பதும் அவசியம் ஆகும்.  இதுகுறித்து மணக்கரை விவசாயி வினாயகம் கூறியதாவது.  பருத்தி முளைத்து 40 - 45ம் நாட்களில் 35 கிலோ யூரியா, 14 கிலோ பொட்டாஷ் ஆகிய வகைகளை மேலுரமாக இட வேண்டும். அதே போல 60வது நாளிலும் இந்த உரக்கலவையை இடவேண்டும். அப்போது பார் எடுத்து செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். 75-80வது நாள் செடியின் 15வது கணுவையும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 85-90 வது நாள் 20வது கணுவையும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிடவேண்டும்.

   மேலும் நாப்தலின் அசிட்டிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை 1 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுவிடும் நேரப்பருவத்தில் தெளிக்க வேண்டும். 2 சதவீத டி.ஏ.பி. கரைசலை முறையே  45, 75 நாளில் இலைவழியே தெளிக்கவேண்டும். இவ்வாறு பருத்திச்செடியை காய்க்கும் பருவம் வரை பராமரிக்க வேண்டும் என்றார். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக லேசாக கீறல் தோன்றி, பின்பு சுமார் 2-3 நாளில் முழுவதும் நன்றாக மலர்ந்து வெடித்த பின்தான் பருத்தி எடுக்க வேண்டும். 120ம் நாள் தொடங்கி வாரம் ஒருமுறை அல்லது 10 நாளுக்கு ஒருமுறை என 4 முறை பருத்தி எடுக்கலாம்.


Tags : area ,Koothanallur , koothanallur ,Cotton crop,flowering season, Maintenance work, farmers
× RELATED திருத்துறைப்பூண்டி நகரில்...