×

தன்னிகரில்லா தழுதாழை மரச்சிற்பங்கள் உள்ளங்கையில் கடவுள் உருவம் உயிர்ப்பெறும் அதிசயம்

* ஆண்டுக்கு ஒருமுறை கைவினை பொருள் கண்காட்சி நடத்த சிற்பிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர் : தழுதாழை மர சிற்பங்கள் தன்னிகரில்லா இடத்தை பெற்றுள்ளது. உள்ளங்கைகளுக்குள் கடவுள் உருவங்கள் உயிர்ப்பெறும் அதிசயமாக சிற்பங்கள் உள்ளது. எனவே பெரம்பலூரில் ஆண்டுக்கு ஒருமுறையாக கைவினை பொருட்கள் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். தழுதாழை மரச்சிற்பம் தமிழகத்தில் மட்டுமல்ல தரணியெங்கும் புகழ்பெற்றது. தேர்களை மட்டுமன்றி தெய்வங்களையும், அழகு பெண்களை மட்டுமன்றி அலங்கார கதவுகளையும், கலைநயம் மிக்க சிற்பங்களையும் கைவினை பொருட்களாக இங்குள்ள சிற்பிகள் வடிவமைக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு தயாரித்த மரச்சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடத்தப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றது இவர்களது ஈடில்லா பெருமைக்கு சாட்சியாகும். இங்குள்ள சிற்பிகள் மத்திய அரசால் வழங்கப்படும் மாஸ்டர் கிராப்ட்ஸ் பட்டமும், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியால் வழங்கப்படும் தேர் ஸ்தபதி, தேர் சிற்பி பட்டங்களையும் பெற்றவர்கள்.

இங்கு 100க்கும் மேற்பட்டோர் சிற்ப தொழிலை செய்து வருகின்றனர். தமிழக அரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரும்பாவூர்- கிருஷ்ணாபுரம் சாலையில் அமைத்து கொடுத்த சிட்கோ எனப்படும் தொழிற்பேட்டை இன்றளவும் அடிப்படை வசதிகளின்றியே உள்ளது. இருந்தும் தேக்கு, இலுப்பை, வாகை, மாவலிங்கை மரங்களிலிருந்து இவர்களது கைவண்ணத்தில் தினம்தினம் கடவுள்கள் அவதரித்து தான் வருகின்றனர். அரையடி முதல் ஆறடி சிற்பங்களும், ஓராயிரம் முதல் ரூ.1 லட்சம் மதிப்பிலான சிற்பங்களை வடிவமைத்து வண்ணம் தீட்டி, வருடாவருடம் ஹைதராபாத் முதல் ஹரித்துவார் வரை  ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இங்குள்ள பிவிஏ பட்டம் பெற்ற சாமிநாதன் (32) என்ற சிற்பி, கை அளவுகளில் கடவுள்களி்ன உருவம், கீ செயின்களில் கிருஷ்ணர், வள்ளுவரை உருவத்தை வடிவமைத்து தருவதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. தாமரையில் வீற்றிருக்கும் தனலட்சுமி, வீணையுடன் வீற்றிருக்கும் சரஸ்வதி, முருக்கு மீசை முப்பாட்டன் சாமி, குடும்பத்தாரின் குல தெய்வ சாமிகள், விரல் வடிவ விநாயகர் சிலைகள் வியப்பிலே ஆழ்த்துகின்றன. ராமனை மட்டுமன்றி இயேசுவையும் சிற்பமாக செதுக்கும் இவர், அல்லாவுக்கு உருவமிருந்தால் அவரையும் சிற்பத்தில் செதுக்கி காட்டுவேன் என்கிறார்.

மனது இல்லாத மரச்சிற்பத்தில் கூட வெட்கப்படும் பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைக்கிறார். இவரது வேண்டுகோள் என்னவென்றால் விழாக்களில் விருந்தினரை கவுரவிக்க சாதாரணமாக சால்வைகள் அணிவித்த பழக்கம்மாறி புதுமையாக புத்தகம் வழங்குவதுபோல், சிறுசிறு சிற்பங்களை பரிசளித்தால் சிற்பிகள் பலரும் சிகரம் தொடுவதற்காக காத்திருக்கின்றனர் என்கிறார்.

மரச்சிற்பத்தை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் தான் மனது வைக்க வேண்டும். கடவுள்களையே படைக்கும் சிற்பிகள் வாழ்வு கரைந்து காணாமல் போய்விடாமல் இருக்க உழைப்பை சிந்தி உருவாக்கிய சிற்பங்களை சந்தைப்படுத்த ஏதுவாக ஆண்டுக்கு ஒருமுறையேனும் கைவினை பொருட்கள் கண்காட்சியை பெரம்பலூரில் நடத்த வேண்டும். மாநில  கண்காட்சிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். விவசாயிகளும், தொழிலாளர்களுக்கும் வங்கி கடனுதவி வழங்குவதைப்போல் நலிந்த நிலையிலுள்ள மர சிற்பிகளை கண்டறிந்து கடனுதவி வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள சிற்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : God , Perambalur,Carved sculptures,Sculptors , gods sturcture
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?