×

செந்துறை அருகே திருமணம் முடிந்த கையோடு மரக்கன்று நட்டு வைத்த மணமக்கள்

செந்துறை : செந்துறை அருகே திருமணம் முடிந்த கையோடு கிராமம் முழுவதும் 80 மரக்கன்றுகளை நடடு வைத்த மணமக்களை கிராம மக்கள் பாராட்டினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாபு(29). இவர், கடந்த 2017 முதல் மரங்களின் நண்பர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பை 32 நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கி உள்ளார். தொடர்ந்து கிராமத்தில் பல இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ள இவர்கள் தொடர்ந்து பராமரித்தும், புதிய மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அருண்பாபு தனது மனைவி பிரியாவுடன், குமிழியம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை, சாலையோரங்கள் என பல்வேறு இடங்களில் நிழல் தரும் 80 மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இதற்காக, பொக்லைன், மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வலை உள்ளிட்டவற்றிக்காக ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளார். இதற்காக பொய்யாதநல்லூரில் உள்ள சோலைவனம் என்ற நாற்றுப்பண்ணை இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. இவரது செயலை அக்கிராம மக்கள் பெரிதும் பாராட்டினர்.

இதுகுறித்து மரங்களின் நண்பன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், நாங்கள் பள்ளி மாணவர்களுக்கு மரம் வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் வாரவிடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நடுவது, பராமரிக்கும் முறை குறித்து விளக்கமளித்து ஊக்குவித்து வருகிறோம், இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பலரும் மூங்கில் கம்புகள், நீர் மற்றும் பல உதவிகள் செய்ய முன் வருகின்றனர். எதிர்காலத்தில் பசுமையான கிராமத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம் என தெரிவித்தார். மணமக்களுடன் கிராம இளைஞர்களும் சேர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : bride ,Seventh , Newly married couple,Senthurai ,Tree
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...