×

இது ஓட்டுபோட நிற்கும் கூட்டம் அல்ல...

மதுரை : மதுரை மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான குடிமன்னர்கள் கடும் வெயிலில்  மதுவாங்க திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நேற்று நடந்ததால், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை விடுமுறை விடப்பட்டது. இதனால் குடிமகன்கள் மதுவை தேடி அலைந்தனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், வாரம்தோறும் மது அருந்துபவர்களும் தவித்தனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் எல்லையான சாமநத்தத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள புலியூரில் டாஸ்மாக் கடை நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டது. இங்கு மது வாங்க காலை 9 மணிக்கு ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வரிசையில் நின்றனர். கடும் வெயிலிலும் மெயின் ரோட்டில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வாகனங்கள் நெடுங்குளம் மெயின் ரோட்டில் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுக்கடை 12 மணிக்கு திறந்தவுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுவை வாங்கியவர்கள் அந்த பகுதியில் உள்ள முள் புதரில் கும்பல் கும்பலாக குடித்தனர். ஆயிரக்கணக்கானோர் வரிசையில் திரண்டு இருந்ததால், பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அப்பகுதியில் நடந்ததால், பத்திரிகையாளர்கள் அந்த ரோட்டில் சென்றனர். அப்போது பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதை பார்த்த போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். உடனே கடையை மூடு என சத்தம் போட்டபடி சென்றனர். அங்கிருந்து பத்திரிகையாளர்கள் சென்றபின்பு, மீண்டும் வெயிலில் குடிமன்னர்கள் நின்று மதுவை வாங்கி குடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : meeting , Madurai,Tasmac,Large Queue, Drinkers, heavy summer
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...