×

குமரியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு பொது நல்லி, குழாய்கள் கசிவால் வீணாகும் குடிநீர்

* சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மார்த்தாண்டம் : தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இதில் மேட்டூர், பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பவானிசாகர், முல்லை பெரியாறு, ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட 15 முக்கியமான பெரிய அணைகள் உள்ளன. இந்த அணைகளே குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பெய்த மழை இயல்பைவிட 14 சதவீதம் குறைவு. அதிகபட்சமாக வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் இயல்பைவிட 24 சதவீதம் மழை குறைந்திருந்தது. குமரி மாவட்டத்திலும் தற்போது மழைப்பொழிவு மிகவும் குறைந்து வருகிறது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக்காலமாக உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் பிப்ரவரி முதலே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

கோடை வெயிலின் தாக்கத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வீடுகளில்கூட இருக்க முடியவில்லை. மின்விசிறிகள் இயங்கினாலும் புழுக்கம் குறைவதில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் கோடை மழை தலைகாட்டி விட்டு சென்றுவிட்டது. பானி புயலால் மழை பெய்யும் என கூறினர். அதுவும் கைவிரித்து விட்டது. இதனிடையே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி உள்ளது. இது 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கமும் வாட்டி வதைக்கிறது.

இதனிடையே கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரிப்பிஞ்சு, எலுமிச்சை மற்றும் கரும்பு சாறு, மோர், பானகம் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் அணைகள், கிணறுகள் உட்பட நீர்நிலைகளும் வேகமாக வறண்டு வருகின்றன.

பல இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால்கூட சரியாக குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. இதனால் வேறுவழியின்றி 25 லிட்டர் கேன் குடிநீரை ரூ.35க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இது இப்படியிருக்க சில உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் வழங்கும் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் கசிந்து வருகிறது. சில இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது. அதுபோல பல பொது நல்லிகள் சரிவர பராமரிக்கப்படாததால் அவற்றில் இருந்தும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது.

இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் நாள்தோறும் ஏராளமான குடிநீர் யாருக்கும் பலனின்றி வீணடிக்கப்படுகிறது. குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் பல இடங்களில் இதுபோல வீணாகும் குடிநீர் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Kumari , marthandam,drinking water,pipe leakage,kanyakumari,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து