×

சுழலாத மின்விசிறி, எரியாத மின்விளக்கு அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் அவுட்

தேவாரம் : தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவில் ஆண்டுக்கணக்கில் ஓடாத மின்விசிறிகள், எரியாத பல்புகளால் தினந்தோறும் நோயாளிகள் திண்டாடுகின்றனர். அடிப்படை வசதியில்லாத அரசு மருத்துவமனைகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், சீமாங் மருத்துவமனையாக உள்ளன.

24 மணிநேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதி உள்ளது. அதேநேரத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் இயங்கும் அரசு மருத்துவமனைகள் அதிகரித்து வரும் நோயாளிகளின் வசதிக்காக கட்டிட விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுகின்றன. இவற்றில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளனர். ஆனால் நோயாளிகளுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள்தான் கேட்பாராற்று கிடக்கின்றன.

குறிப்பாக நாள்தோறும் ரத்த அழுத்தம், சர்க்கரை, கிட்னி பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதிலும் அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் பிரிவு தொடங்கப்பட்ட பின்பு 30 வயதினை கடந்தாலே ரத்தஅழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோய் பாதிப்பால் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள், ஊசிகள் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

இதனால் உள்நோயாளிகளாக தங்குபவர்கள் எண்ணிக்கை தற்போது பெருகிவருகிறது. அதிலும் மழைக்காலங்களில் வீசிங் பாதிப்பு, காய்ச்சல் என உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் திண்டாடுகின்றனர். அதிலும் நோயாளிகளுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவசிகிச்சைக்கு டாக்டர்கள் தயாராக இருந்தாலும் வார்டுகளில் தினந்தோறும் அல்லல்படும் நோயாளிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது.

உள்நோயாளிகள் பிரிவில் மின்விசிறிகள் இருந்தாலும் அவை ஓடுவதில்லை. பாத்ரூம்கள் சுத்தமாக கழுவப்படுவதில்லை. விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அவலநிலையினால் நோயாளிகள் நொந்துபோய் உள்ளனர். இதேபோல் இரவுநேரம் மட்டும் அல்லாமல் பகலிலேயே கொசுக்கள் நோயாளிகளை பறந்து பறந்து கடிக்கின்றன. வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனையில் மின்விசிறி ஓடாததால் துடிக்கும் நிலை ஏற்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள வயரிங் மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனாலும் மின்விளக்குகள் பீஸாகி திண்டாடும் நிலை உள்ளது. மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கென்றே டெண்டர் விடப்படுகின்றன. இதனை எடுக்கக் கூடிய தனியார் காண்ட்ராக்டர்கள் தரமில்லாத மின்சாதன பொருட்களை வாங்கி உபயோகம் செய்கின்றனர்.

இதனால் தினந்தோறும் நோயாளிகள் படக்கூடிய அவஸ்தை வார்த்தைகளால் சொல்லமுடியாதநிலையில் உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், `` அரசு மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் வரக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், உள்நோயாளிகளாக தங்கி இருப்பவர்களுக்கு உரிய வசதிகள் இருப்பதில்லை. பாத்ரூம் முதல் பல்பு வரை எல்லாமே பிரச்னையாகத்தான் உள்ளது.

எரியாமல் கிடக்கும் பல்புகள் ஒருபுறம், இருந்தாலும் நோயாளிகள் வசதிக்காக மாட்டப்பட்ட மின்விசிறிகள் காட்சிபொருளாக உள்ளன. நோயாளிகள் படக்கூடிய அவஸ்தைகளை கலைவதற்கு தேனிமாவட்ட கலெக்டர் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று களஆய்வு செய்வது மிகவும் அவசியம்’’ என்றனர்.

கடிவாளம் போடுவது யார்?

மருத்துவமனைகளில் பராமரிப்புகளுக்கு என்றே பல லட்சக்கணக்கில் நிதிஒதுக்கீடு நடக்கிறது. இதனை அரசியல்செல்வாக்கு படைத்த ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்கின்றனர். அரைகுறையாக அரசுமருத்துவமனைகளில் வேலை பார்க்கின்றனர். தரம் குறைந்த மின்சாதனபொருட்கள், மின்விசிறிகளை வாங்கி மாட்டுகின்றனர். இவர்களுக்கு கடிவாளம் போடவேண்டிய தேனி சுகாதாரத்துறை இணைஇயக்குநரோ, கலெக்டரோ கண்டுகொள்வதில்லை.

Tags : facilities , devaram , government hospital, fan, basic facility
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...