×

ஈரான் போரிட விரும்பினால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் நாடு போரிட விரும்பினால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளால் அதிருப்தியடைந்த ஈரான், அணு ஆயுதம் தயாரிக்க வசதியாக யுரேனியம் செரிவூட்டல்களில் ஈடுபட போவதாக அறிவித்தது. இதனால் ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என்று எச்சரித்தார்.

எச்சரிக்கையுடன் நில்லாது கடந்த சில நாட்களுக்கு முன்பு யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் என்ற அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் கடற்பகுதிக்கு டிரம்ப் அனுப்பினார். வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போரிட விரும்பினால் அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும் என்றும், எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்கா பயப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.


Tags : Iran ,Trump ,US ,country , America, Iran, President Trump, Twitter
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...