×

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு: டெல்லியில் நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

டெல்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில்  தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று  மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி  29 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ல் 38 தொகுதிகளையும் வென்ற அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்  பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அங்கு பாஜ முதல் முறையாக கணக்கை தொடங்கி வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவிலும் பாஜ 18-20 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜ வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் பாஜ கூட்டணிக்கு 30 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 10 இடங்கள்  கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 இடங்களில் வெல்லும்  என்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 7 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. புதிய அரசு, ஆதரவு அளிக்கும் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே காங்கிரசுக்கு பின்னடைவு என கருத்துக் கணிப்புகள்  தெரிவித்துள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் 23-ம் தேதியில் இருந்து 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : BJP ,meeting ,Delhi ,National Democratic Alliance , Opinion polls, BJP, Delhi, National Democratic Alliance, Consultative Meeting
× RELATED காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட...