மாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு

ஜமைக்கா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் அதிரடி ஆல் ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கெய்ரன் போலார்டு இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் கிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10 பேர் கொண்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

இதில் ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆல் ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கெய்ரான் போலார்டு சேர்க்கப்பட்டுள்ளனர். டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது பெயர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 10 மாற்று வீரர்களுக்கான பயிற்சி முகாம் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் (மே 19-23) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் கூடுதலாக ஒரு பயிற்சி ஆட்டத்துக்கும் (ரோஸ் பவுல், மே 22) ஏற்பாடு செய்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கேல், கெமார் ரோச், டேரன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாய் ஹோப், ஷெல்டன் காட்ரெல், எவின் லூயிஸ், ஷேனான் கேப்ரியல், கார்லோஸ் பிராத்வெய்ட், ஆஷ்லி நர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், பேபியன் ஆலன், ஓஷேன் தாமஸ், நிகோலஸ் பூரன். மாற்று வீரர்கள்: சுனில் அம்ப்ரிஸ், டுவைன் பிராவோ, ஜான் கேம்ப்பெல், ஜொனாதன் கார்ட்டர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோரிச், கீமோ பால், கேரி பியரி, ரேமன் ரீபர், கெய்ரன் போலார்டு.

Related Stories:

>