×

ஊழல் வழக்கில் சிறை சென்ற வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மரண போராட்டம்: உடனே விடுவிக்க கோரிக்கை

தாகா: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பதால், தரமான சிகிச்சை பெற அவரை உடனே விடுவிக்க வேண்டும் என வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் 3 முறை பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா. இவர் தனது மறைந்த கணவரும், வங்கதேச முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரகுமான் பெயரில் அனாதை இல்லம் நடத்தி வந்தார். இதற்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகளை கலீதா ஜியா முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இது தவிர இவர் மீது மேலும் பல ஊழல் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இரண்டு ஊழல் வழக்கில் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். தலைநகர் தாகாவில் கலீதா ஜியா அடைக்கப்பட்டுள்ள சிறை 200 ஆண்டு பழமையானது. அவருக்கு இதய நோய் உட்பட பல பிரச்னைகள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக உள்ளது. இவருக்கு எப்போதும் இன்சுலின் தேவை. இதன் காரணமாக அவரது நாக்கில் ஏற்பட்ட புண் ஆறவில்லை. இடது தோள்பட்டை, மூட்டு ஆகியவையும் உணர்வற்ற நிலையில் உள்ளன. தனிமை மற்றும் முறையான சிகிச்சை வசதி இல்லாததால் கலீதா ஜியா மரண போராட்டம் நடத்தி வருவதாக கூறும் பிஎன்பி கட்சி நிலைக்குழு உறுப்பினர் ஜமிருதீன், அவருக்கு, தரமான சிகிச்சை கிடைக்க கலீதாவை, உடனே அரசு விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், வழக்குகளில் ஆஜராவதை தவிர்க்க, உடல்நிலை சரியில்லை என கலீதா ஜியா கூறுவதாக, வங்கதேச அரசு கூறியுள்ளது.

Tags : Khaleda Jiya ,Bangladesh ,jail , Jail in corruption scandal, former prime minister of Bangladesh, Khalita Zia, death struggle
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...