×

சேலம் வாழப்பாடி அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் தப்பியோட்டம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் குடிசையில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கியதை வனத்துறையினர் நேற்று கண்டுபிடித்தனர். வனத்துறையினரை பார்த்ததும் பெண் உள்பட 2 பேர் தப்பியோடிவிட்டனர். 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் உபகரணங்கள், இயந்திரங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு புழுதிக்குட்டை காப்புக்காட்டில், வாழப்பாடி உதவி வன பாதுகாவலர் முருகன், வன சரக அலுவலர் ஞானராஜ் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 5 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது பெரியகுட்டி மடுவு காளியம்மன் கோயில் பகுதியில் மர்ம நபர் ஒருவர் மரத்துண்டு ஒன்றை வெட்டி எடுத்துச்சென்றுள்ளார். சந்தேகமடைந்த வனத்துறையினர், அந்த மர்ம நபரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றனர். அவர் அருகில் விவசாய நிலத்தில் உள்ள குடிசைக்குள் சென்றார்.

வனத்துறையினர் குடிசை அருகில் சென்றபோது, உள்ளே இருந்த பெண் பார்த்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்டு அங்கிருந்த பெண்ணும், மர்மநபரும் கண்ணிமைக்கும் நேரத்தில் குடிசையை விட்டு வெளியேறி தப்பிவிட்டனர். அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் குடிசையின் உள்ளே  சென்று பார்த்தனர். அங்கு நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும்  தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. சுமார் 20 நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான கட்டைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் இரண்டு தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளும் இருந்தது.

மேலும், துப்பாக்கி தயாரிக்கும் பட்டறையும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், குடிசையில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்தது, அதே ஊரை சேர்ந்த வரதன் மகன் ராமர் எனவும், தோட்டத்தின் உரிமையாளர் கரியான் மகன் ராமர் (45) எனவும் தெரியவந்தது. ஆனால் தப்பியோடிய பெண் யார் என தெரியவில்லை. இங்கு நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்திய கட்டைகள் அனைத்தும் விலை உயர்ந்த தோதகத்தி எனப்படும் ஈட்டி மரம் ஆகும். இதையடுத்து அங்கிருந்த நாட்டுத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், ஆயுதங்கள் மற்றும் கருவிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், வாழப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். இங்கு பல ஆண்டுகளாக ரகசிய தொழிற்சாலை அமைத்து நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து வந்துள்ளனர். யாருக்கெல்லாம் துப்பாக்கிகள் தயாரித்து விற்றுள்ளனர், இவர்களுக்கு நக்சல் அமைப்புடன் தொடர்பு உள்ளதா, தப்பியோடிய ஆண், பெண் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே தகவலறிந்த வாழப்பாடி போலீசார், வனத்துறை அலுவலகத்துக்கு வந்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திச்சென்றனர்.


Tags : forest area ,Salem Wayanad , Salem, Livestock, Country Puppet, Factory,
× RELATED ஓவேலி வனச்சரக பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு: 10 வனக்குழுவினர் தீவிரம்