இன்றைய பங்குச்சந்தை போக்கை தேர்தல் கணிப்பு முடிவு செய்யும்: தீவிரமாக கண்காணிக்க செபி முடிவு

மும்பை: தேர்தல் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப இன்றைய பங்குச்சந்தை நிலவரம் இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதிலும், தேர்தல் நெருங்க நெருங்க முதலீட்டாளர்களிடையே தயக்கமும், பதற்றமும் காணப்பட்டது. இதுதவிர, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போர், ஈரான் மீதான தடை காரணமாக கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவை பங்குச்சந்தையில் எதிரொலித்தன.

 இதனால், கடந்த ஏப்ரல் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ₹8.53 லட்சம் கோடியை இழந்தனர். பங்குசந்தை குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. இதன்பிறகும் பங்குச்சந்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஒரு நாள் ஏறுமுகத்திலும், ஒரு நாள் இறங்குமுகத்திலும் என தள்ளாட்டம் தொடர்கிறது. கடைசி 2 நாட்கள் திடீர் ஏற்றம் கண்டது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 ஆகவும் இருந்தன.

 இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், தேர்தல் போன்ற அரசியல் நிகழ்வுகள் எப்போதுமே பங்குச்சந்தையில் எதிரொலிக்கும். இதற்கு முன்பும் பங்குச்சந்தையின் போக்கை நி்ர்ணயிப்பதில் இவை முக்கிய காரணியாக இருந்துள்ளன. பொருளாதார நிபுணர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு முக்கியமான தருணம். முதலீட்டாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், கடைசி கட்ட தேர்தல் நேற்று நடந்தது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தல் கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கேற்பதான் இன்றைய பங்குச்சந்தையின் போக்கு காணப்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த முதலீட்டாளர்கள் பலர், தேர்தல் கணிப்புக்கு ஏற்ப தங்கள் முதலீடுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்றனர். இருப்பினும், கருத்துக்கணிப்பை பயன்படுத்தி செயற்கையாக பங்கு மதிப்பை உயர்த்துவது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>