×

சொகுசு கார்கள்... விலை உயர்ந்த பங்களா திருவிழாக்களில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக திருமண மண்டபங்கள், கோயில் திருவிழாக்களின்போது பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அந்த  காவல் நிலையங்களில் இது தொடர்பாக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி காசர்கோடு மாவட்டம், காஞ்சங்காடு அருகே ஒரு கோயிலில் திருவிழாவில்  மூதாட்டியின் 6 பவுன் தங்க செயின் திருடுபோனது. இதுகுறித்து ஹோஸ்துர்க் போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.


இதற்கிடையே, ஹோஸ்துர்க் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 இளம்பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் மூதாட்டியிடம் செயின் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த திவ்யா என்ற ஜோதி (42) மற்றும் ஜெயந்தி(44) என்று தெரிவித்தனர். தனிப்படையினர் திருப்பூர் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் போலீசிடம் அளித்தது பொய்யான முகவரி என்பது தெரியவந்தது. பின்னர் மதுரை, திருச்சூர் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.அப்ேபாது திவ்யா, ஜெயந்தியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் என்பதும், இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டினர் என்பதும் தெரியவந்தது. திருப்புவனத்தில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இவர்கள் சொகுசு பங்களா கட்டி உள்ளதும், ஆடம்பர கார்களை வைத்துள்ளதும் குழந்தைகளை செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்து வருவதும்  தெரியவந்தது. திருட்டு தொழில் மூலம் வருமானம் வருவதை மறைக்க கேரளாவில் உயர் பதவி வகிப்பதாக அந்த பகுதியினரை நம்ப வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : bungalows , Luxury cars, festival, arrest
× RELATED கடற்கரையில் விதிமீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் அகற்றம்