×

கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பிரக்யாவை பாஜவிலிருந்து நீக்க வேண்டும்: நிதிஷ்குமார் வலியுறுத்தல்

பாட்னா: ‘‘கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பிரக்யா சிங்கை பாஜவில் இருந்து நீக்க வேண்டும்’’ என, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். ‘காந்தியை கொன்ற கோட்சே, இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி’ என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சர்ச்சையை தொடங்கி வைத்தார். இதுபற்றி போபால் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருமான பிரக்யா சிங் தாகூர் கூறுகையில், `காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கருத்து கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
 இந்த நிலையில், பாஜ கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், பிரக்யா சிங்கின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில், ராஜ்பவன் அருகே உள்ள அரசு பள்ளியில் வாக்களித்த நிதிஷ்குமார், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோட்சே பற்றி பிரக்யாசிங் கூறியது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. காந்தி, இந்த தேசத்தின் தந்தை. கோட்சே பற்றி இவ்வாறு பேசுவதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிரக்யா சிங்கை பாஜ உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவரை நீக்குவதா வேண்டாமா என முடிவு செய்வது அந்த கட்சியின் உள்விவகாரம். இருப்பினும், தேசத்தை கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய பேச்சை சகித்துக் கொள்ளவே முடியாது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை பாஜ பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். கோட்சே பற்றிய பிரக்யா சிங்கின் பேச்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோரும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜ கூட்டணியில் நிதிஷ்குமார் இருந்தாலும், பிரக்யா சிங் விவகாரம் உட்பட பல விஷயங்களில் பாஜவுடன் அவருக்கு மனக்கசப்பு உள்ளதாக  தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், பாஜ கூட்டணி கட்சியில் உள்ள நிதிஷ்குமார் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பது, பாஜவுக்கு விடப்படும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. அதோடு, இது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Prakya ,patriot ,Godse ,Nitish Kumar ,Bhajan , Kotse, Patriot, Nitish Kumar, assertion
× RELATED மோடிக்கு காந்தி தேசப்பிதா கோட்சே...