×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படாத சிசிடிவி கேமராக்கள்: கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு, புறநகர் பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருவதால், 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இங்கு, கூட்ட நெரிசல் மற்றும் வெளியூர் பயணிகளை குறிவைத்து வழிப்றி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, இங்கு கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய 65 சிசிடிவி கேமராக்கள் போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் இந்த சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்காததால், தற்போது அனைத்தும் பழுதடைந்து காட்சிப் பொருளாக மாறியுள்ளது. இதை பயன்படுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிசிடிவி கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை பழுது காரணமாக குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். ஆனாலும், பழுதான சிசிடிவி கேமராக்களை சீரமைக்க இன்றுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை நகரில் குற்றங்களை தடுக்கவும், கொள்ளையர்களை விரைந்து பிடிக்கவும் சிசிடிவி கேமரா பெரும்பங்கு வகிக்கிறது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் உள்ளதால், தினசரி குறைந்தபட்சம் ஒரு கொள்ளை சம்பவமாவது நடைபெறுகிறது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பழுதான சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு, அங்கு நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சம்பந்தப்பட்ட போக்குவரத்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : bus stand ,incidents ,Koyambedu ,robbery , Koyambedu, bus stand, cacti-operated cameras, robbery, increase
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி