×

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்: பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்

சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில், முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் நேற்று  சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக  3வது நாளான நேற்று காலை கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  இதையொட்டி அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 4 ராஜ வீதிகள் மற்றும் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு, கீரை மண்டபம், தாயார் குளம், பிள்ளையார்பாளையம், கச்சபேஸ்வரர் கோயில், மூங்கில் மண்டபம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருட சேவை உற்சவத்தின்போது பெருமாளுக்கு முன்பாக வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணத்தை பாடியவாறு சென்றனர். கருடசேவை உற்சவத்தில் வேலூர், அரக்கோணம், திருத்தணி, பெரும்புதூர், சென்னை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில் கருட சேவை உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் ஆகியவை வழிநெடுகிலும் வழங்கப்பட்டது. விழாவின் ஏழாவது நாளான மே 23ம் தேதி தேரோட்டமும், தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் வரதராஜபெருமாள் தேவி, பூதேவி சமேதராய் ஹம்ச வாகனம், சூரியப்பிரபை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனம், தொட்டித் திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள்மேல் பல்லக்கு உள்ளிட்ட உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். இதற்கான விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தியாகராஜன், பணியாளர்கள், கைங்கர்யதாரர்கள் செய்து வருகின்றனர்.



திருக்குடை விழுந்து விபத்து

கருட சேவை உற்சவத்தை ஒட்டி நேற்று அதிகாலை பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை நூற்றுக்கும் மேற்பட்டோர் திருக்கச்சி நம்பித்தெரு, ரங்கசாமி குளம், விளக்கொளி பெருமாள் கோயில் தெரு, கீரைமண்டபம், பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு வழியாக தூக்கி வந்தனர். அப்போது புத்தேரி தெரு நோக்கி வந்தபோது பெருமாளுக்கு பிடித்து வந்த திருக்குடை தவறி கீழே விழுந்தது. இதில் பல்லக்கு தூக்கி வந்த ஊழியர் முனுசாமி என்பவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

Tags : Devotees ,regions ,temple ,Kanchi Varadarajaperumal , The Kanchi Varatharajaperumal Temple, the Garuda Sevas Utsavam,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்