×

திருவள்ளூர் மக்களவை தொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தவிர்க்க துணை ராணுவத்தினர் குவிப்பு

சென்னை: ஆவடி அருகே மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பிரச்னை காரணமாக மறுவாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட மக்களவை தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. அப்போது, ஆவடி அடுத்த கன்னபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள 195வது வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக, அமமுக கட்சியின் பூத் ஏஜென்ட் உள்பட பலர் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, எதிர்க் கட்சியினர் ஒன்று திரண்டு வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மாவட்ட துணை தேர்தல் அதிகாரியும், சப்-கலெக்டருமான ரத்னா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பதிவான ஓட்டுகளை சரிபார்த்தனர். அப்போது, பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 37 வாக்குகளும், திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு 27 வாக்குகளும் பதிவானது தெரியவந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றி சீல் வைத்தனர். அங்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
அதன்படி, மேட்டுப்பாளையம் ஊராட்சி பள்ளியில் நேற்று காலை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் ஆண்கள் 513, பெண்கள் 539 என மொத்தம் 1,049 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சவடி மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு மறுவாக்குபதிவை முன்னிட்டு நடு விரலில் மைவைத்தனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வாக்குப்பதிவை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் டாக்டர் சுரேந்திர குமார் ஐஏஎஸ், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த வாக்குச்சாவடியில் மாலை 6 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் மொத்தம் 868 ஆண் வாக்காளார்கள் 406 பெண் வாக்காளர்கள் 462, வாக்கு சதவீதம் 82.74 வாக்குகள் பதிவானது. திருவள்ளூர் நாடாளுமன்றம் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி ஆவடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி 195ல் மறுவாக்குப்பதிவில் 6 மணி நிலவரப்படி 82.74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அமமுகவினர் விரட்டியடிப்பு:
வாக்குச்சாவடி அருகே நேற்று மாலை 5 மணிக்கு அமமுக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வர முயன்றனர். ஆனால் அவர்களை வரவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனையடுத்து திரும்பிச்சென்ற அவர்கள் சில நிமிடங்கள் கழித்து 50க்கும் மேற்பட்டோருடன் திரும்பி வந்தனர். அப்போது போலீசாரும், துணை ராணுவத்தினரும் சேர்ந்து அமமுகவினரை விரட்டியடித்தனர்.

Tags : constituency ,assembly constituency ,Thiruvallur Lok Sabha ,Poonamallee ,Mettupalayam , Thiruvallur Lok Sabha constituency, Poonamallee assembly constituency, Mettupalayam, re-polling
× RELATED 6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம்...