×

கல்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து சேவை பாதியில் நிறுத்தம்

* பயணிகள் கடும் அவதி
* மீண்டும் இயக்க கோரிக்கை

சேன்னை: கல்பாக்கம் பணிமனையில் இருந்து தாம்பரம், கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்ட பேருந்தை, மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கல்பாக்கம் பணிமனையை மையமாக கொண்டு தடம் எண் 108 என்ற  பேருந்து கல்பாக்கத்தில் இருந்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்தது. இதனால், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி தடம் எண் 108 என்ற பேருந்தை பெருங்களத்தூரில் இருந்து மதுரவயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வரை இயக்கப்பட்டது.  

அதன் பிறகு கோயம்பேடு செல்லாமல் சில காலம் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அது, ‘‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல’’ கடந்த ஓராண்டுக்கு மேலாக பேருந்து தடம் எண் 108 செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் குறைந்த அளவிலான பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கல்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த தாம்பரம்-சென்னைக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கல்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஒரு பேருந்தில் செல்ல வேண்டும். அதன் பிறகு மற்ற பேருந்துகளை பிடித்து தாம்பரம் வரை செல்கின்றனர்.

பின்னர், தாம்பரத்தில் இருந்து மற்ற பேருந்துகள் மூலம் கோயம்பேடு அல்லது சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாவதுடன் நேரமும் வீணாகிறது. எனவே கடந்த காலங்களில் இயக்கப்பட்ட தடம் எண் 108 பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘கோயம்பேட்டிற்கு முன்னர் பாரிமுனையில் இருந்து (பூக்கடை) வெளியூர் பேருந்துகள் சென்றிருந்த காலத்தில் இருந்தே கல்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கும் பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு பாரிமுனையில் இருந்து பஸ் நிலையத்தை கோயம்பேட்டிற்கு மாற்றியதில் இருந்தும் தடம் எண் 108 என்ற பேருந்துகள் சென்றுகொண்டிருந்தது. அதன் பிறகு மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி தாம்பரம் வரை இயக்கினர்.

இப்போது செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்குவதால் நாங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். கால சூழ்நிலைக்கேற்ப பயண தூரத்தை நீட்டித்து பேருந்துகள் இயக்குவதை தவிர்த்து, தூரத்தை குறைத்திருப்பது என்பது நிர்வாக செயலற்ற தன்மையை உணர்த்துகிறது. ஏற்கனவே இயக்கப்பட்ட தடம் எண் 108 பேருந்துகளை வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகளாக இயக்குகிறார்கள். நாங்கள் புதிய வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கச் சொல்லி கேட்கவில்லை. ஏற்கனவே காலம் காலமாக இயக்கப்பட்ட பேருந்துகளைத்தான் இயக்க சொல்கிறோம்’’ என்றனர். நாங்கள் புதிய வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க சொல்லி கேட்கவில்லை. ஏற்கனவே காலம் காலமாக இயக்கப்பட்ட பஸ்களை தான் இயக்க சொல்கிறோம்.

Tags : Koyambedu ,Kalpakkam , Kalpakkam, Koyambedu, bus service, half stop
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...