×

ஐ.டி ஊழியர்களை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் இடமாற்றம்: கமிஷனர் நடவடிக்கை

துரைப்பாக்கம்: இசிஆர் பனையூர் கடற்கரையில் ஐ.டி ஊழியர்களை தாக்கிய2 போலீஸ் காரர்களை பணி இடமாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். திருவான்மியூர் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25). ஐடி ஊழியர். மலையேறும் பயிற்சி பெற்று சிறுவர்களுக்கு மலையேறும் பயிற்சி அளித்து வருகிறார். இவரது நண்பர் சத்தியமங்கலத்தை சேர்ந்த யஷ்வந்த் (27). இருவரும் கடந்த 16ம் தேதி இசிஆர் பனையூர் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் எப்படி மலையேறுவது? டெண்ட் எப்படி அமைப்பது? போன்றவை குறித்து செய்துக்காட்டி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கானத்தூர் காவல் நிலைய போலீஸ்காரர்கள் பாலசுப்ரமணியன் (25) மற்றும் தணிகாசலம் (27) ஆகியோர் இவர்களிடம் விசாரித்தனர்.

இதில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 2 போலீசாரும் அவர்கள் இருவரையும் பொய் வழக்கில் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். மேலும் பணம் கேட்டு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் போலீஸ்காரர்களிடம் ₹2 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர். இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். இதனையடுத்து சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இரு போலீஸ்காரர்களும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : policemen ,IT employees ,Commissioner , IT employees, attacked, 2 policemen, transferred
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு