×

அடுக்குமாடி குடியிருப்புகள் அடாவடியால் கழிவுநீர் குட்டையாக மாறி வரும் குளம்: வேங்கைவாசல் மக்கள் புலம்பல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சி, காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பொன்னியம்மன் கோயில் தெருவில் குளம் ஒன்று அமைந்துள்ளது. சுற்றுப் பகுதி குடியிருப்புகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கி வருகிறது. மேலும், எந்த காலத்திலும் தண்ணீர் வற்றாமல் நீர் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன், இந்த குளத்தை சுற்றி கட்டப்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக குளத்தில் விடப்பட்டு வருகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.

அதுமட்டுமின்றி, நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் குளத்தில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால், சுற்றுவட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. இதுஒருபுறம் இருக்க தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் விடப்படுவதால், கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இதுகுறித்து பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சுற்றுப் பகுதி குடியிருப்புகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தூர்ந்து காணப்படுகிறது.

இதில், அடுக்குமாடி குடிருப்புகளின் கழிவுநீரை விடுவதால் நீர் மாசடைந்து கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இந்த குளம் முறையாக பராமரிக்கப்பட்ட போது, வீடுகளில் 90 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தாலே தண்ணீர் கிடைக்கும். தற்போது, 300 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என பலரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த பயனும் இல்லை. நாங்களே ஒன்று சேர்ந்து குளத்தை எங்கள் சொந்த செலவில் சீரமைக்க முன்வந்தபோது எங்களையும் அவர்கள் எதுவும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Pond ,apartment buildings , Apartments, sewage ponds, changing ponds, vangaiyavasal, people's lamentation
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்