×

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 4 ெதாகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு: அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 84.28 சதவீதம்

சென்னை: திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 84.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது. இந்த 4 தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதன்படி சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்ற பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்களும், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த 4 தொகுதிக்கான காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. முன்னதாக, காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரத் துவங்கினர். எனினும் அவர்கள் 7 மணிக்கு பிறகே ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். கடும் வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுப்போட்டுச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்குச்சாவடி முன் திரண்டனர். இதனால் வாக்குச்சாவடிகளில் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது. மாலையில் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை சரியாக 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. சில வாக்குசாவடிகளில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 6 மணிக்கு பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது சில  வாக்குச்சாவடிகளில் குளறுபடிகள், பிரச்னைகள் ஏற்பட்டன. சில வாக்குச்சாவடிகள்  கைப்பற்றப்பட்டன. சில இடங்களில் மாதிரி வாக்குப்பதிவை சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் அழிக்காமல் விட்டுவிட்டனர். அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த 13 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. திருவள்ளூர் மக்களவை தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 195ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நாடாளுமன்ற  தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் வாக்காளர்களின்  நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கடந்த 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குகள். நேற்று நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், 13 வாக்குசாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு வாக்குகள் வருகிற 23ம் தேதி(வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 11 மணி முதல் யார் வெற்றி பெற்றார்கள் என்ற விவரம் தெரியவரும்.


இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்றிரவு அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சராசரியாக 77.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சூலூரில் 79.41 சதவீதமும், அரவக்குறிச்சியில் 84.28 சதவீதம், திருப்பரங்குன்றம் 74.17 சதவீதம், ஒட்டப்பிடாரம் 72.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 13 வாக்குச்சாவடிக்கு நடத்தப்பட்ட மறுவாக்குப்பதிவில் 84.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஓரிரு புகார்கள் மட்டுமே வந்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.  மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் சவாலான விஷயங்கள் இருந்தன. இவற்றை எல்லாம் தாண்டி இந்தியா முழுவதும் அமைதியான முறையில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி காட்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tiruparankuram ,Sulur ,Aravakurichi , Tiruparankundram, Sulur, Aravakurichi, Ottapidaram,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி