×

வாக்குச்சாவடி அருகே பணம் விநியோகித்த அதிமுகவினர்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குச்சாவடி அருகேயே வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகித்தனர். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்டக்குறிச்சி அரசுப்பள்ளியில் வாக்கு மையம் எதிரே திமுக மற்றும் அதிமுக சார்பில் பணிமனைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் நூற்றுக்கணக்கான திமுக மற்றும் அதிமுகவினர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டுள்ளீர்கள். இருதரப்பினர்களும் வேறு பகுதிக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.

இதனடிப்படையில், தோட்டக்குறிச்சி தெருப்பகுதியில் திமுகவினர் ஒரு புறமும், எதிர்புறம் அதிமுகவினரும் இருக்கைகள் போட்டு அமர்ந்திருந்தனர். அங்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார், யாரும் இங்கு இருக்கக்கூடாது, கலைந்து செல்லுங்கள் என கூறினர். எங்களின் சொந்த இடத்தில், சொந்த தெருவில் நின்று கொண்டுள்ளோம். வாக்கு மையத்தில் இருந்து 200 அடி தாண்டிதான் நாங்கள் நிற்கிறோம். எனவே, எங்கள் வேட்பாளர் வரும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் என திமுகவினர் தெரிவித்தனர். டிஐஜி எச்சரிக்கை: ஆனால், கலைந்து செல்லுங்கள் என போலீசார் வலியுறுத்தினர்.

அந்தநேரத்தில், டிஐஜி லலிதா லட்சுமி ரோந்து வரும்போது, கூட்டமாக இருப்பதை பார்த்து, நடந்த விபரங்களை போலீசாரிடம் கேட்டார். பின்னர், மைக்கை வாங்கி, `ஒரே இடத்தில் கட்சியினரும் பொதுமக்களும் கூட வேண்டாம். அங்கிருந்து செல்லுங்கள்’ எனக்கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் தோட்டக்குறிச்சிக்கு வேட்பாளர் செந்தில்பாலாஜி வந்தார். அவரிடம் திமுகவினர் நடந்த விபரங்களை தெரிவித்தனர். இதன்பின், அனைவரும் திரும்பி சென்றனர். இதேபோல், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே அரசுப்பள்ளியில் வாக்குச்சாவடி அருகிலும் அதிமுக, திமுகவினரை போலீசார் கலைந்து செல்ல கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இயந்திர கோளாறு:பள்ளப்பட்டி தெற்கு மந்தைதெரு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பூத் எண் 210ல் கன்ட்ரோல் யூனிட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதிகாரிகள் சரி செய்தபின் 1 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் சின்னதாராபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் இயந்திரம் பழுதானது. தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது. இங்கு 15 நிமிட தாமதத்துக்கு பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

சின்னதாராபுரம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன வாக்குச்சாவடியில் மின்தடை காரணமாக 7.20 மணிக்குதான் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் இங்கு அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படாமல் மாற்றி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் அகர வரிசைப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அதேபோல் சவுந்தராபுரம் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. இதுபற்றி அறிந்ததும் அமமுக வேட்பாளர் சாகுல் அமீது அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் இயந்திரங்களை அகர வரிசைப்படி மாற்றி வைத்தபின் வாக்குப்பதிவு நடந்தது.

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் தொகுதியில் காலை 7 மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்களை விட பெண்களே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறுக்குச்சாலை வாக்குச்சாவடி அமைந்துள்ள பஜார் பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்தி விட்டு, பூத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சேர் போட்டு அமர்ந்து, கூட்டமாக  பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை அதிரடிப்படை போலீசார் விரட்டியடித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி 72.61 சதவீதம் வாக்குப்பதிவானது.

திருப்பரங்குன்றம் அதிமுக பணம் வினியோகம்: திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் வாக்குச்சாவடி அருகே அதிமுகவினர் தேர்தல் அலுவலகம் அமைத்தனர். அங்கிருந்து பணம் வினியோகம் செய்தனர். இதுதொடர்பாக திமுகவினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் திமுகவின் தேர்தல் அலுவலகத்தை மட்டுமே காலி செய்தனர். அதேபோல, தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை, கைத்தறி நகர் பகுதிகளில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தனர். இதுபற்றி திமுகவினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆளுங்கட்சியினர் தொடர்ந்து முகாமிட்டு, பணம் விநியோகம் செய்தனர். தொகுதி முழுவதும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் கும்பல் கும்பலாக திரண்டு வாக்குச்சாவடி அருகே நின்று ஓட்டு கேட்டனர். இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

முதியவர் சுருண்டு விழுந்து பலி:
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியை சேர்ந்தவர் மாடசாமி (60). விவசாயியான இவர், நேற்று அங்குள்ள வாக்குப்பதிவு மையத்தில் பகல் 12 மணிக்கு வாக்களிக்க வந்தார். வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் தூரம் கடந்த நிலையில் சுட்டெரித்த வெயிலால் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

Tags : Distributor ,polling station ,Tirupurankundi , Polling, Money Distribution, AIADMK, Tiruparankulam, Thrissur
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...